திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கலைவாணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன், தண்ணீர் இல்லாமல் கருகிவரும் நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையுடன் இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டம் நிறைவடைந்ததை அடுத்து கூட்டம் தொடங்கியபோது, மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தொலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு பேசியதோடு, ஆட்சியர் விரைவில் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து கூட்டம் தொடர்ந்தது.









