திருச்சி மாவட்டம் இனாம்புலியூர் பகுதியில் இளம்பெண் மீனாட்சி (30) உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீரங்கம் தாலுகா இனாம்புலியூரைச் சேர்ந்த ராஜசேகரின் மனைவியான மீனாட்சி, பி.எஸ்சி. நர்சிங் படித்தவர். இவர்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்று, 4 வயதில் ஆண் குழந்தையும், 14 மாத பெண் குழந்தையும் உள்ளனர். திருமணத்தின்போது வரதட்சணை வழங்கப்பட்ட போதிலும், கூடுதலாக டிராக்டர் மற்றும் நிலம் கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர் தனது தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது, தாயார் பெரியக்காவின் அழைப்பின்பேரில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மீனா மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு, அவரை சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, மீனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மீனாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சோமரசம்பேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இன்று விசாரணைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த கோட்டாட்சியர் சாலை தவவளன், உறவினர்களை விசாரணைக்கு அழைத்தார். ஆனால், மீனாவின் மரணத்திற்கு நீதி வழங்கக் கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனை பிரதான நுழைவுவாயில் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோட்டாட்சியர் விசாரணையில் பங்கேற்று தங்களது புகார்களைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். அதனைத் ஏற்று உறவினர்கள் மறியலைக் கைவிட்டு விசாரணைக்குச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.









