திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவின் போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண் பக்தரின் இரண்டரை சவரன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெற்ற விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, விழாவில் கலந்துகொண்ட பெண் பக்தர் ஒருவரின் கழுத்தில் இருந்த 2½ சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து தனது நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கோவில் வளாகம் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.









