திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் மற்றும் அங்குள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
திட்டத்தின் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.









