திண்டுக்கல் மாவட்டம், புதுசத்திரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தக் கல்குவாரியிலிருந்து தொடர்ந்து வெளியேறும் நச்சுப் புகையினால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குவாரிக்கு அருகிலேயே தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பயிற்சி மையம் இயங்கி வருவதால், அங்கு பயிலும் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தொடர்ச்சியாக வெளியேறும் புகையினால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதோடு, விவசாயமும் பாதிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இத்தகைய மாசு ஏற்படுத்தும் செயல்பாடுகள் இருப்பது கவலையளிக்கிறது," என்று தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது உரிய விசாரணை நடத்தி, நச்சுப் புகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









