விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள உள்விளையாட்டு அரங்கில், AIM'S கராத்தே பயிற்சி மையத்தின் சார்பில் 'AIM'S 1st ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026' போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. P. ரகுராமன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியின் தொடக்க விழாவிற்கு மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அ. நேவிஸ் அந்தோணி ரோசி, காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் R. செல்வராஜ், ஜே.ஆர்.சி மாவட்ட கன்வீனரும், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினருமான முனைவர் ம. பாபு செல்வதுரை, விழுப்புரம் லயன்ஸ் சங்க நிர்வாகி A. முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, போட்டியில் பங்கேற்ற சுமார் 700-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப்பொருட்களைப் பயன்படுத்தாமல் தனிவாழ்வில் முன்மாதிரியாகத் திகழ்வதோடு, அதுகுறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், வலிமையான உடலை உருவாக்கும் கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் பயில்வோர்கள் நல்லொழுக்கத்துடன் பொதுமக்களுக்கு நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. நிறைவாக, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.









