திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, போலியாக நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.5.53 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சலாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது குடும்பத் தேவைக்காக வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முயன்றபோது, இவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10,000 சம்பளத் தொகையுடன் சேர்த்து, மைனஸ் தொகையாக ரூ.5,53,57,725 இருப்பதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் அவர் விசாரித்தபோது, சென்னை மின்ட் பகுதி, பரசுராமன் தெரு முகவரியில் 'எம்.எஸ். டிரேடர்ஸ்' (M.S. Traders) என்ற பெயரில் லியாகத் அலி பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் 2024-2025 ஆம் நிதியாண்டில் ரூ.5,53,63,217 ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளதாக, சென்னை புரசைவாக்கம் வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சிஜிஎஸ்டி ரூ.2.02 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.2.02 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.1.47 கோடி என மொத்தம் ரூ.5.53 கோடி வரி நிலுவையில் உள்ளதாகவும், வரியைச் செலுத்தத் தவறியதால் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வங்கி ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், தனக்கு சென்னையில் எந்தவொரு வணிக நிறுவனமும் கிடையாது என்றும், தனது ஆவணங்களை மர்ம நபர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளதாகவும் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் கோடிக்கணக்கில் வரி பாக்கி இருப்பதாக வந்த நோட்டீஸைக் கண்டு மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவர், தனது ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களைத் திருடி, போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் மோசடி கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









