மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட மின் விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் அமைந்துள்ள பாரத் மெட்டல் மற்றும் பழைய இரும்புக் கடையில், சிவகங்கை மாவட்டம் பாப்பாஊரணி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (32) என்பவர் கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குளித்துவிட்டு வந்த சத்யராஜ், தனது அறையில் இருந்த மின்விளக்கு சுவிட்சை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட சக தொழிலாளி ஈஸ்வர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சத்யராஜுக்கு லதா என்ற மனைவியும், அஸ்மிதா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.









