விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியில் குடியிருப்புகள், பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் தனியார் ரெடிமேட் சிமெண்ட் கான்கிரீட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை (VAO) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் அதிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் கடுமையான காற்று மாசு ஏற்படும் என்றும், தொழிற்சாலைக்குச் செல்லும் கனரக வாகனப் போக்குவரத்தால் அப்பகுதி சாலைகள் முற்றிலும் சேதமடைவதோடு அடிக்கடி விபத்துகள் அதிகரிக்கும் என்றும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இந்த ஆலைக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









