திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தயக்கம் காட்டுவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் – பஜ்ரங்தள் அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவையும் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும் வலியுறுத்திக் குரல் கொடுத்து வரும் தன்னை, காவல்துறையினர் வீட்டிலேயே முடக்கியுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை இல்லையா என்றும், அதனை மதித்து நடைமுறைப்படுத்தக் கோருவது சட்டவிரோதமான செயலா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் ஒருவரின் கருத்துரிமையையும், சட்டப்படியான போராட்ட உரிமையையும் காவல்துறையினர் இவ்வாறு கட்டுப்படுத்தலாமா என்று வினவியுள்ள அவர், தன்னை வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுப்பதற்கான சட்டப்பூர்வமான காரணம் என்னவென்று விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் கேட்பது சட்டத்திற்கு எதிரான உரிமை அல்ல என்றும், நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமை எனத் தெரிவித்த அவர், எத்தனை தடைகள் வந்தாலும் சட்டத்தின் வழியில் நின்று பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்காகவும் நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.









