தூத்துக்குடி மாநகராட்சியில் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி 3-ம் மைல் முதல் மில்லர்புரம் வரை நடைபெற்று வரும் இந்தப் பணிகள், சுமார் 53.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 7.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் இப்பணியில், ஓடையானது கூடுதலாக 5 மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது. மேலும், எப்.சி.ஐ. (FCI) குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை இந்த மேம்பாட்டுப் பணிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.
ஆய்வின் போது பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, 'வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் கனமழை பெய்யும் காலங்களில் மாநகர மக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் நிரந்தரத் தீர்வு காணப்படும்' என்று தெரிவித்தார்.









