திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து தமிழகத்திற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டி வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2015-ம் ஆண்டு பாஜகவைச் சேர்ந்த மறைந்த அனந்தகுமார் வீட்டில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், அப்போதைய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்று, மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மறைமுகமாக அனுமதி அளித்தனர். உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளின்படி, கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடக முதல்வர் சிவக்குமார் சட்டத்தை மதிக்காமல் அணை கட்டுவோம் எனப் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகத்தை எதிர்த்து, வரும் 17-ம் தேதி தென்காசியில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் எங்களது நிலைப்பாடு அறிவிக்கப்படும்" என்றார்.
கடந்த கால ஆட்சியைக் விமர்சித்த அவர், "முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை என அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவல்துறை ஒரு கார்ப்பரேட் முதலாளிக்காக வேலை பார்க்கும் கூலிப்படையாக மாற்றப்பட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 14 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், தற்போதைய முதல்வர் விஜய்யின் நேர்மையான ஆட்சியால் ஊழலுக்கான கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வழங்கி மனிதநேயத்தோடு இந்த அரசு செயல்பட்டுள்ளது. வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் சந்திக்க முயன்றபோதும் முதல்வர் அனுமதி அளிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், பெரியார் பெயரிலான 'அறிவுச்சோலை' நூலகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முந்தைய திமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொன்றுதொட்டு வரும் நடைமுறை என்பதால் அதில் குழப்பம் விளைவிக்கக் கூடாது என்றும் வைகோ வலியுறுத்தினார். இந்த ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும் எனச் சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்றும், வரவிருக்கும் தேர்தல்களில் முதல்வர் விஜய்யின் தலைமையிலான கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.









