மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையில், உலக மரபு வார விழாவையொட்டி கடற்கரை மணலில் தத்துரூபமாக செதுக்கப்பட்ட மணல் சிற்பம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த டேனிஷ் கோட்டை, அதன் பழமை மாறாத கட்டிடக்கலைக்காக இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்றது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலக மரபு வார விழாவின் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 19-ஆம் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோட்டையை இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, கோட்டையின் முகப்புப் பகுதியில் கடற்கரை மணலில் டேனிஷ் கோட்டையின் வடிவம் தத்துரூபமாக மணல் சிற்பமாக உருவாக்கப்பட்டது. தொல்லியல் துறை அலுவலர் வசந்த் மற்றும் இளநிலை பொறியாளர் அகிலன் ஆகியோரின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட இந்த மணல் சிற்பத்தை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.









