திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நகர மன்றத் தலைவர் ராணி சண்முகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
போளூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இதில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.எம். நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் போளூர் நகராட்சி ஆணையாளர் வேலவன், போளூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்து ஊர்வலத்தை வழிநடத்தினர். மழைநீரின் அவசியத்தையும், அதன் சேமிப்பு முறைகளையும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.









