அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகப் போற்றப்படும் பழனி அடிவாரம் அருள்மிகு திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளும் சிகர நிகழ்வுமான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15, 2026) கோலாகலமாக நடைபெறுகிறது.
கடந்த 6 நாட்களாகக் கடும் சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், விரதத்தின் நிறைவு நாளான இன்று அதிகாலை முதலே திருஆவினன்குடி கோயில் வெளிப்பிரகார வளாகத்தில் குடும்பம் குடும்பமாகக் குவிந்தனர். இங்கு பாரம்பரிய வழக்கப்படி 'தண்டு விரதம்' கடைபிடிக்கப்பட்டது.
இதற்காகப் பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து வாழைத்தண்டு, ஊறவைத்த உளுந்தம்பருப்பு, ஆப்பிள், வாழைப்பழம், இஞ்சி, தேங்காய் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து 'தண்டு கூட்டு' எனப்படும் சிறப்புப் பிரசாதத்தைத் தயார் செய்தனர். பின்னர், வாழை இலைகளில் அந்தப் பிரசாதத்தை வைத்து, முருகப்பெருமான் திருவுருவப் படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து, தீபம் ஏற்றிப் பக்திப் பரவசத்துடன் நைவேத்தியம் செய்து வழிபட்டனர்.
ஆறு நாட்கள் உபவாசம் மற்றும் மிளகு விரதம் இருந்த பக்தர்கள், இன்று தண்டு விரதப் பிரசாதத்தை முருகப்பெருமானுக்குப் படைத்து உட்கொண்டு தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். தொடர்ந்து நாளை (7-ஆம் நாள்) நடைபெறும் முருகன் - தெய்வானை திருக்கல்யாண வைபவ தரிசனத்துடன் சஷ்டி விரதம் முழுமையாக நிறைவடையவுள்ளது.









