திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, இன்று (நவம்பர் 15) ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் கோயில்களில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி பெருவிழா முதன்மையானது.
அறுபடை வீடுகளுக்கு இணையாகப் போற்றப்படும் வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த 10-ஆம் தேதி கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி வரை தினமும் காலை சிங்காரவேலவர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழகத்தில் திருச்செந்தூர் உள்ளிட்ட மற்ற முருகன் கோயில்களில் இருந்து மாறுபட்டு, வயலூர் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சூரர்களுக்குப் பெருவாழ்வு அளிக்கும் (சூரசம்ஹாரம்) ஐதீகம் கடைபிடிக்கப்படுவது தனிச்சிறப்பாகும். அதன்படி, விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி சக்திவேல் வாங்கும் வைபவம் இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு சிங்காரவேலவர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்குப் பெருவாழ்வு அளிக்கும் சூரசம்ஹார நிகழ்வும், முத்துக்குமார சுவாமி வெள்ளி கேடயத்தில் காட்சியளிக்கும் வைபவமும் நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக, நாளை (நவம்பர் 16) இரவு தேவசேனா - சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.









