நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உதாசீனப்படுத்தியதாகக் கூறி, வழக்கறிஞர்கள், பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழக முதல்வரைக் கண்டித்து அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டதோடு, உருவப்படமும் செருப்பால் அடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினர் கொடும்பாவியைப் பறிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர் ஜோசப் விஜய்யின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்து முழக்கங்களை எழுப்பினர்.
கண்டன உரையும் குற்றச்சாட்டுகளும்:
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் குற்றாலநாதன் கூறியதாவது:
- சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டிய தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது.
- காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரங்களில் அண்டை மாநிலங்கள் இதே கேள்வியை எழுப்பினால் இந்த அரசு என்ன பதில் சொல்லும்?
- சென்னையில் உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி பிள்ளையார் கோயில் இடிக்கப்பட்டபோது நீதிமன்ற உத்தரவு நினைவுக்கு வந்ததா?
- அரசாங்கமே தீர்ப்பை மதிக்காத சூழலில், சாமானிய மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.
- நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் சட்டத்துறை அமைச்சர் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சி விரைவில் மக்களால் தூக்கி எறியப்படும்.









