ஏற்காட்டில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
'ஏழைகளின் ஊட்டி' என அழைக்கப்படும் ஏற்காட்டில் 69 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இதுவரை தனியாக அரசு கல்லூரிகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இப்பகுதி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்காட்டில் உடனடியாக அரசு கலைக் கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்காடு மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியாகும். சமீபகாலமாக இப்பகுதியில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. மாணவர்களின் கல்வித் தேவையின் அவசியத்தை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏற்காட்டில் அரசு கலைக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.









