வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி வனப்பகுதியில் வனத்துறையினர் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த மேலும் இருவர் தப்பியோடிய நிலையில், அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாகச் சுற்றித்திரிவதைக் கண்டனர். வனத்துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். விரைந்து செயல்பட்ட துறையினர், அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர், தனகோண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (25) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்திற்காகவே அவர்கள் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டுவந்தது விசாரணையில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாகியுள்ள மற்ற இருவரையும் கைது செய்யக் குடியாத்தம் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.









