நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் மருந்தகத்தில் உள்ள மருந்து இருப்பு விவரங்களை அவர் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனை வளாகத்தின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் புறநோயாளிகள் பதிவேற்றம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த அமைச்சர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பொதுமக்களுக்குத் தரமான மருத்துவச் சேவைகள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் அம்ரீத், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் லதா, மருத்துவக்கல்லூரி முதல்வர் மோகன் காந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.









