மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று ஒருநாள் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பாதையான பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மலை மீது செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று மாலை 6:00 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக, இன்றும் இரண்டாவது நாளாக பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளனர்.









