தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியையே சென்றடைந்தது. இதில் திரளான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஜனநாயகக் கடமையை ஆற்றுவது குறித்த உறுதிமொழியையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தப் பேரணியில் பூம்புகார் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மாணிக்கராஜ், உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான ஹரிதரன், தரங்கம்பாடி தேர்தல் துணை வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
பேரணியைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், வாக்காளர் விழிப்புணர்வை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.









