பயிர் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கைகளில் குடைகளை பிடித்தவாறும், கொட்டும் மழையில் நனைந்தபடியும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கடந்த 2025 ஏப்ரல் 30-க்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் 2025, 2026-ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வழிவிடு முருகன் கோயில் பகுதியிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, வண்டிக்காரத் தெருவில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வாயில் வரை சென்றனர். வங்கியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்ததால், வங்கி வாசலிலேயே அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது கோரிக்கை மனுக்களை வங்கி நிர்வாகத்திடம் அளித்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
செய்திகள்
மழையையும் பொருட்படுத்தாமல் ராமநாதபுரத்தில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
🕒 25 நவ., 2026, 04:27 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •பயிர் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








