தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்தும், பருவமழை பொய்த்தது மற்றும் காவிரியில் நீர்வரத்து இல்லாததைக் காரணம்காட்டி காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டும், மடிப்பிச்சை ஏந்தியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் விவசாய முகாம்களை நடத்தி போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.









