திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாரத்தில் போதிய மழையின்றி காய்ந்து வரும் நிலக்கடலை பயிர்களைக் காப்பாற்ற, விவசாயிகள் கூடுதல் செலவு செய்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
செய்யாறு பகுதியில் உள்ள விண்ணவாடி, நெடும்பிறை மற்றும் மாரியநல்லூர் ஆகிய கிராமங்களில் ரபி பருவத்திற்காக விபி.10, டிவிஎம்.14, கிர்.5 போன்ற நிலக்கடலை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதி நிலங்களில் 32 சதவீதம் புஞ்சை நிலங்களாகும், இவை பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பியுள்ளன.
இதுவரை 50 சதவீத பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பயிர்கள் போதிய மழையின்றி வாடி வருகின்றன. பயிர்களைக் காக்க, அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு நான்குக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் கூலி வழங்கி, கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு இத்தகைய கூடுதல் செலவுகளை மேற்கொண்டால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.









