கரூர்: கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு வருவதால், தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுமக்கள் கூறியதாவது: "கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பிரச்சனையால் பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்து வருகிறோம். தற்போது நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கே சீல் வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தும் சிறிய சில்லறை வியாபாரக் கடைகள் கூட 'வணிக வளாகங்கள்' எனக் கருதப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன" என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட கடைகள், ஒரு மருந்தகம் மற்றும் ஒரு ஏடிஎம் மையம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட வாங்கபாளையம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 150 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் முன்னோர்கள் வழிவழியாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் பத்திரப்பதிவுக் கட்டணம் மற்றும் வரி செலுத்தியுள்ள எங்கள் வீடுகளை விட்டு வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கு செல்வது?
எங்கள் பிள்ளைகளின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வாதாரம் அனைத்தும் இந்த வீடுகளையும் கடைகளையுமே நம்பியுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சீல் வைக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என வெண்ணமலை பகுதி மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.









