கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் கோபி (எ) கேசவன் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் ஏழுமலை, மேற்கு மாவட்ட செயலாளர் அக்ரி. தண்டபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், கரும்பு அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகளான கோதண்டராமன், பாலகிருஷ்ணன், பலராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நனைந்தபடியே கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.









