திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த மகா தீப தரிசனத்தைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 11:39 மணிக்குத் தொடங்கும் நிலையில், திருக்கார்த்திகை திருவிழா நாளை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று நள்ளிரவு முதல் வெளி மாவட்டங்கள், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற நிலையில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, இன்று நண்பகல் முதல் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.









