திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 12,501 அகல் விளக்குகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சிவலிங்க வடிவம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மணப்பாறையை அடுத்த பளுவஞ்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, மேற்கு நோக்கிய சிவாலயம் என்ற சிறப்பைக் கொண்ட அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டின் கார்த்திகை தீப வழிபாடும் பக்தர்களின் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமாக, திருக்கோயில் வளாகத்தில் 12,501 அகல் விளக்குகளைக் கொண்டு நேர்த்தியாக சிவலிங்க உருவம் வடிவமைக்கப்பட்டு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.









