தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி ஆகியோர், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வருகை தந்த அவர்கள், சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். வழிபாட்டிற்குப் பிறகு கோவிலின் வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டு ரசித்த நடிகை ரோஜா, அங்குள்ள இசைத் தூண்களைத் தொட்டு அதன் நுணுக்கங்களை வியப்புடன் கவனித்தார். நடிகை ரோஜாவைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ரோஜாவிடம், மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், 'மக்களுக்குப் பிடிக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமைந்தால், நிச்சயமாக மீண்டும் நடிப்பேன்' என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக அரசு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், 'நோ பாலிடிக்ஸ்' (No Politics) என்று சிரித்தபடியே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.









