கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் எழுப்பப்பட்டன.
வரும் டிசம்பர் 4 அன்று சென்னையில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து முறையிடுவது என்றும், அதில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சங்கக் கொடிகளுடன் கலந்துகொண்டு கோரிக்கைகளை முழங்கினர்.
எனினும், வழக்கமான அலுவலகப் பணி நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால், சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அவசரப் தேவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.









