மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான 'கடைமுக தீர்த்தவாரி' வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றதாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகள், தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவதாக ஐதீகம். இந்த விழாவையொட்டி, மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெறும்.
இந்த விழாவில் பங்கேற்க உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், வரும் 21-ம் தேதி சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிநாளாகச் செயல்படும் என்றும், அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.









