திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த நவீன பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை தொழில்முறை வீரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு அணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.825 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் மூலம், நெல்லை மாவட்ட இளைஞர்கள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், ஆரோக்கியமான உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் சிறந்த வாய்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.









