புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பூக்கடை வைத்துள்ள அப்துல் சலீம் என்ற இளைஞரின் ஸ்கூட்டருக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் சலீம் தனது பேட்டரி ஸ்கூட்டரை வழக்கம் போல் நிறுத்தியிருந்தபோது, திடீரென பாம்பு ஒன்று வண்டிக்குள் ஊர்ந்து செல்வதை அவர் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த வாகனத்தை மெதுவாக இயக்கியபடி புதுக்கோட்டை தலைமை தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாகனத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும், ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் பிற உதிரிபாகங்களை கழற்றி முழுமையாக சோதிக்கத் தேவையான நவீன கருவிகள் அங்கு இல்லாததால், நீண்ட நேரம் போராடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
தீபாவளி விடுமுறை காரணமாக பழுது நீக்கும் மெக்கானிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், வாகனத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், ஸ்கூட்டரை தீயணைப்பு நிலைய வளாகத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்ற அப்துல் சலீம், பின்னர் வந்து எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். வண்டிக்குள் பாம்பு இன்னும் இருக்கிறதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், அந்த வாகனம் அங்கேயே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.









