திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில், திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (31) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, காந்தி மார்க்கெட் 5-ம் நம்பர் கேட் அருகில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட எழிலரசன் (37), அண்ணாநகர் 2-வது கிராஸ் பகுதியில் விற்பனை செய்த சாதிக் பாஷா (51), உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் ஈடுபட்ட கார்த்திக் (43) மற்றும் தில்லைநகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் ஒருவர் என நேற்று ஒரே நாளில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









