பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக் கோரி, கருங்குழி பெரிய ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் என்.எல்.சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கருங்குழி பெரிய ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், என்.எல்.சி இரண்டாம் சுரங்க துணைப் பொதுமேலாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கருங்குழி பகுதியில் 700 எக்டேர் பரப்பளவில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்.எல்.சி இரண்டாம் சுரங்கத்தில் வெளியேற்றப்படும் உபரிநீரைக் கொண்டே இரு பருவ சாகுபடிகளும் செய்யப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக நாற்று விடப்பட்டு, நடவு செய்யத் தயாரான நிலையில் இருந்தபோது, ஏரியில் போதிய தண்ணீர் இல்லாததால் நாற்றுகள் காய்ந்துவிட்டன.
தற்போது சம்பா சாகுபடிக்கும் போதிய அளவு தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் மனுவைப் பெற்றுக் கொண்ட பொதுமேலாளர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.









