தீபாவளிப் பண்டிகையை விபத்துகளில்லாமல் பாதுகாப்பாகக் கொண்டாடும் வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையின் போது எற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், மாவட்ட அலுவலரின் உத்தரவின் பேரில் ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் அடுத்த சோலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள், பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கினர். மேலும், எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகத் தீயை அணைக்கும் முறைகள், ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் பீதியடையாமல் தரையில் படுத்து உருளும் எளிய உத்திகள் மற்றும் அவசர காலங்களில் தீயணைப்புக் கருவிகளை இயக்கும் விதம் குறித்து நேரடி செயல்விளக்கம் மற்றும் போலி ஒத்திகை (Mock Drill) செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வுப் பயிற்சியில் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தீ பாதுகாப்பு குறித்த நடைமுறைகளைக் கற்று பயனடைந்தனர்.









