திருப்பத்தூர் மாவட்டத்தில் மதுபானக் கடை ஊழியர் மீது பீர் பாட்டிலை வீசித் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் ஏரிக்கோடி - மாடப்பள்ளி சாலையில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில், நேற்று விற்பனை மந்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மது வாங்க வந்த போதை ஆசாமி ஒருவர், க்யூ ஆர் கோடு (QR Code) மூலம் பணம் செலுத்தி மது பாட்டில் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறி, ஆத்திரத்தில் கடையின் ஷட்டர் மீது பீர் பாட்டிலை வீசியுள்ளார். இதில் பாட்டில் உடைந்து சிதறியதில், அதன் துகள்கள் ஊழியர்களின் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள், அந்த நபரைச் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமியப் போலீசார், விசாரணையில் அந்த நபர் போஸ்கோ நகரைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.









