மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைப்பகுதியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் பகுதிக்குச் செல்ல முயன்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், நெல்லை தச்சநல்லூர் சோதனைச் சாவடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நைனார் நாகேந்திரன், கட்சித் தொண்டர்களுடன் வாகனங்களில் புறப்பட்டார். மாநகர எல்லையான தச்சநல்லூர் அருகே அவரை வழிமறித்த போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நைனார் நாகேந்திரன், "எந்தவித சட்டப்பூர்வ தடையுத்தரவும் இல்லாத நிலையில், என்னை வழிபாட்டிற்குச் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26-ன் படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது விருப்பப்படி இறைவனை வழிபட முழு உரிமை உண்டு. ஆனால், தமிழகத்தில் இந்த அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன" என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஆளுங்கட்சியினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே அரசு இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது" என்றார். கைது செய்யப்பட்ட நைனார் நாகேந்திரன், நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.









