தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுவரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக உப்பளத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் அல்லது வேறு மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவைத் திரட்டி வரும் உப்பு உற்பத்தியாளர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது, நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்தும், தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, தங்களது தொடர் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின் போது உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர். உப்பளங்களைப் பாதுகாத்து, ஏழை எளிய தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.









