மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் செல்போன்கள் தொடர்ச்சியாகத் திருடப்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட இளைஞர் சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தினசரி 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள், இந்த அரசு மருத்துவமனைக்கு வந்து புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இரவு நேரங்களில் தங்கியிருக்கும் நோயாளிகளின் உறவினர்களைக் குறிவைத்து மர்மநபர்கள் செல்போன்களைத் திருடிச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த முன்தினம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயுடன் மருத்துவமனையில் தங்கியிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், இரவு நேரத்தில் வெளிப்புற வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் இருந்த ரூ. 40,000 மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார்.
அதில், மர்மநபர் ஒருவர் செல்போனைத் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த ஆதாரங்களைச் சேகரித்த இளைஞர், சீர்காழி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் தொடரும் இது போன்ற திருட்டுச் சம்பவங்களை அலட்சியப்படுத்தாமல் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் இது போன்ற மர்மநபர்கள் மருத்துவமனைக்குள் அச்சமின்றி நுழைவது தொடர்ந்தால், குழந்தைகள் திருட்டு அல்லது நகைப்பறிப்பு போன்ற பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு இதனை ஒடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









