பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பத்திர எழுத்தர்கள் இரண்டு நாட்களுக்குப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிளை பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் இன்று (10.11.2026) மற்றும் நாளை (11.11.2026) ஆகிய இரண்டு நாட்களுக்குப் பத்திரப் பதிவு தொடர்பான எந்தப் பணிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்பூர் கிளை பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில், "பதிவுத் துறையை தனியார் மயமாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் (10.11.2026 மற்றும் 11.11.2026) பத்திரப் பதிவுப் பணி இல்லை" எனக் குறிப்பிடப்பட்டு, தங்களது போராட்டத்திற்குப் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பத்திர எழுத்தர்களின் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.









