நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மது போதையில் சாலையின் நடுவே நபர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படுத்திருந்ததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே வேல்முருகன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் அருகே செல்லும் முக்கிய சாலையின் நடுவே, சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் நிலைதடுமாறி விழுந்து கிடந்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் சாலையின் நடுவிலேயே கிடந்ததால், அவ்வழியாகச் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், அந்த வழியாகச் சென்ற பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டது.
சாலையில் வாகனப் போக்குவரத்து நடைபெறுவதைப் பொருட்படுத்தாமல் மது போதை நபர் தொடர்ந்து அங்கேயே கிடந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே போதை ஆசாமி நீண்ட நேரம் படுத்துக்கிடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.









