மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கைவிடப்பட்ட பழைய எண்ணெய் கிணற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், அப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குத்தாலத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் அப்பகுதி பொதுமக்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் சந்திப்பின் போது கூறியதாவது:
"குத்தாலம் தேரடி பைரவா நகரில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கைவிடப்பட்ட பழைய எண்ணெய் கிணற்றில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக எண்ணெய் கிணறு பராமரிப்புப் பணிகள் ஏழு நாட்களில் முடிவடையும் நிலையில், ராஜகோபாலபுரத்தில் இரண்டு மாதங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்வதாக மாவட்ட நிர்வாகம் அச்சுறுத்தி பணிகளை மேற்கொண்டது," என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், குத்தாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 49 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் உள்ளதாகவும், இதனால் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கோட்டாட்சியரைச் சந்திக்கச் சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படாது என்றும், ஏற்கெனவே உள்ள பழைய கிணறுகள் படிப்படியாகச் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், புதிய கிணறுகள் அமைக்க முடியாததால், பழைய கிணறுகளில் இருந்து பக்கவாட்டில் சுமார் 3 கிலோமீட்டர் ஆழத்திற்குத் துளையிட்டு எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டினார்.
இதனை கடந்த 2024-ஆம் ஆண்டே கண்டறிந்து தெரிவித்தபோது தமிழக அரசு தடை விதித்ததாகவும், ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாக புதிய பெர்ஃபரேட்டிங் கன் எனப்படும் கூம்பு வடிவ ஜெட் கருவி மூலம் பூமிக்கடியில் வெடிப்புகள் ஏற்படுத்தப்படுவதால், மேல்மட்டத்தில் உள்ள நல்ல நிலத்தடி நீருடன் அடிமட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் உப்புநீர் கலந்து குத்தாலம் பகுதியின் நீராதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அமலுக்கு வந்தும் குத்தாலம் பகுதி உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு இப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதுடன், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.









