ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள செம்பளிச்சாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 27 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் மகாதுரை (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் (50) மற்றும் தன்ராஜ் (30) ஆகியோர் அந்தியூர், பருவாச்சி, அத்தாணி, ஆப்பக்கூடல் மற்றும் பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குமாரபாளையத்தில் அவர்கள் வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்திருந்த 850 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 877 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.









