சர்வதேச கழிப்பறை தினத்தை முன்னிட்டு, திருவாரூர் நகராட்சிப் பகுதியில் சுற்றுலா மானியத் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நவீன கழிப்பிடத்தை, திமுக மாவட்டச் செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச கழிப்பறை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் அவசியம், திறந்தவெளி மலம் கழித்தலைத் தடுப்பது, சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாப்பது மற்றும் நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் நகராட்சிப் பகுதியில் சுற்றுலா மானியத் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சர்வதேச கழிப்பறை தினமான இன்று நடைபெற்றது. இதில் திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கழிப்பிடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் நகர மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், திமுக நகரச் செயலாளர் வாரை. பிரகாஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நகரின் தூய்மையை மேம்படுத்தும் வகையிலும் இந்த புதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.









