திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கொலை, கொள்ளை, அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சந்தோஷ் (விளமல்), சுகுமார் (பவித்திரமாணிக்கம்), முரளி (திருக்கண்ணமங்கை), அய்யப்பன் (மன்னார்குடி பாமணி), குருமாறன் (திருத்துறைப்பூண்டி), மனோகர் (முத்துப்பேட்டை ஆலங்காடு) உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 8 அரிவாள்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்ட மேலும் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், மதுபானக் கடைகள் மற்றும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.









