கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரூர், மன்மங்கலம், புகலூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில் பேசிய கரூர் மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஈசநத்தம் செல்வராஜ், தமிழக அரசின் அறிவிப்புக்கும், கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்து தனது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், கூட்டுறவுச் சங்கங்களை அணுகும்போது ரூ.40,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், "விவசாயிகள் தங்களது நிலத்தில் தென்னை, வெங்காயம், முருங்கை எனப் பல்வேறு பயிர்களுக்காக தனித்தனி ஆவணங்கள் மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், தள்ளுபடி என்று வரும்போது மொத்தக் கடனுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படாமல், ஏதேனும் ஒரு தொகைக்கு மட்டும் கணக்கிட்டு ரூ.40,000 மட்டுமே தள்ளுபடி செய்கின்றனர். இது அரசின் தவறா, கூட்டுறவுச் சங்கங்களின் செயலாக்கப் பிழையா அல்லது அதிகாரிகளின் குளறுப்படியா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றபோது உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், புகார் எண்களுக்குத் தகவல் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மூலம் உரிய விளக்கத்தையும் முழுமையான கடன் தள்ளுபடியையும் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.









