ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கார் ஒர்க் ஷாப் உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை பெருந்துறை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெருந்துறை பவானி ரோடு, ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (55). இவர் அப்பகுதியில் விநாயகா கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரிடம் மர்ம கும்பல் ஒன்று ரூ.1 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே கடந்த அக்டோபர் 30-ம் தேதி 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பெருந்துறை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (30), கனகராஜ் (25), விஷ்ணு (28) மற்றும் ஷாருக்கான் (29) என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.70 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.









