திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை கோடை விழா அரங்கத்தில், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு மற்றும் கலை விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெருக்கூத்து, கோலாட்டம், குச்சிப்புடி மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய புஷ்பவனம் குப்புசாமி, நாட்டுப்புற கலைஞர்களை இனி 'மக்கள் கவிஞர்கள்' என்றும், நலிவடைந்த கலைஞர்களுக்கான உதவித்தொகையை 'மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை' என்றும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கலைஞர்கள் கண்ணியமான உடை மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ஆபாசமான செயல்பாடுகள் காரணமாகவே சிலருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசு உதவித்தொகை பெறுவதற்கு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், தயவுசெய்து கொடுக்காதீர்கள். அது குறித்து எனக்குத் தகவல் தெரிவியுங்கள், நான் நேரடியாக முதலமைச்சரிடம் முறையிடுகிறேன்" என அதிரடியாகப் பேசினார். கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர் தனது புகழ்பெற்ற 'ராசாத்தி' பாடலைப் பாடி நிகழ்வை உற்சாகப்படுத்தினார்.









